நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஷகிலா (52). இவர் கட்டணாமச்சம்பட்டி கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு இவரின் மாமியாருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது கணவரும் கரோனாவால் பாதிப்படைந்தார். இதனிடையே ஷகிலாவிற்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில் அவர் தனக்கும் கரோனா தொற்று வந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று (அக். 22) பிற்பகல் திடீரென ஷகிலாவை காணவில்லை. உடனே அவரது மகன் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கட்டணாச்சம்பட்டியில் சுந்தர்ராஜன் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் பெண் சடலம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் பெண்ணின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் உயிரிழந்த பெண் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் ஷகிலா என்பது தெரியவந்தது. மேலும் அவரை யாரேனும் கொலை செய்து கிணற்றில் போட்டார்களா? அல்லது அவர் கரோனா தொற்று வந்து விடும் என்ற பயத்தால் தற்கொலை செய்துகொண்டாரா? என காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க: மதுரையில் குறைந்துவரும் கரோனா உயிரிழப்பு