நாமக்கல் மாவட்ட பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்துத் துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மெகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் மெகராஜ், மருத்துவர்களிடம் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மருத்துவமனைக்குள் உள்ளே வரும் போதும், வெளியே செல்லும் போதும் கை கழுவி சுத்தத்தை உறுதி செய்திட வேண்டும், அதேபோல் மருத்துவமனையில் பணியாற்றும் பணியாளர்களின் சுத்தத்தினையும் உறுதி செய்ய வேண்டும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு சலி, இருமல், தொடர் காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மாவட்ட சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மெகராஜ் கூறும்போது, "கடந்த 45 நாள்களில் நாமக்கல் மாவட்டத்திற்கு வெளிநாட்டிலிருந்து வந்த 72 நபர்களை தொடர்ந்து கண்காணித்துவருகிறோம். இதுவரை யாருக்கும் கொரோனோ வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை. பிற மாநிலங்களுக்கு சென்றுவிட்டு வரும் லாரிகளை கண்காணிக்க அந்தந்த லாரி சங்கங்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
அதேபோல் கேரளாவிற்கு முட்டை, கோழிகளை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிப்பதோடு, அவைகள் எங்கு சென்று வருகின்றன என்பதை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளோம். மேலும், இறந்த கோழிகளை சாலை ஓரங்களில் திறந்த வெளியில் வீசி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் எச்சரித்தார்.
இதையும் படிங்க: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை - பத்மநாபபுரம் அரண்மனை மூடல்!