நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பருவநிலை மாற்றங்களால் கால்நடை மற்றும் கோழிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது குறித்த 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் நாமக்கல்லில் நேற்று தொடங்கியது. இதில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் பாலசந்திரன், கேரளா கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் சசிந்திரநாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பல்வேறு ஆராய்ச்சி கட்டுரை நூல்களை வெளியிட்டு சிறப்புரையாற்றினர்.
![Climate change conference](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/5126661_106_5126661_1574263159831.png)
இந்த கருத்தரங்கில் தலைமை உரையாற்றிய தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் பாலசந்திரன் பேசும்போது கூறியதாவது, உலகம் வெப்பமயமாதலால், பருவநிலை மாற்றம் ஏற்பட்டு 1961 முதல் இதுவரை கடல் மட்டம் 2 மி.மீ அளவு உயர்ந்துள்ளது. இந்த நூற்றாணடில் 60 மில்லி மீட்டர் வரை உயர வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் 2 டிகிரி செல்சியஸ் வெப்பமும் உயர வாய்ப்புள்ளது. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் கால்நடைகளுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக உணவு, குடிநீர் பற்றாகுறை, பல்வேறு நோய் தாக்குதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது, இதனை தடுக்க உலக அளவில் உள்ள அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, இதற்கான தீர்வுகளை காண வேண்டும்.
2050ஆம் ஆண்டில் கால்நடை பெருக்கமும், தேவைகளும் அதிகளவு இருக்கும். அதற்கேற்றார் போல் பருவநிலை மாற்றங்களிலிருந்து அவற்றை காத்திட அனைவரும் முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.