நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் ஓய்வுபெற்ற செவிலி அமுதா குழந்தைகளை மறைமுகமாக விற்பனை செய்து வந்துள்ளார். இதில் செவிலி அமுதாவிடம் ஒரு தம்பதி பேசிய ஆடியோ நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து குழந்தை தரகர் செவிலியர் அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் இராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண் 05/2019 u/s 370(2)(4), 420, 471, 109 IPC & 80, 81 of Juvenile Justice (care and Protection) Act 2015 உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் அமுதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
குழந்தைகளை விற்பனை செய்து வந்த அமுதா மற்றும் அவரது கணவர் ரவிச்சந்திரன் தெரிவித்த தகவல்களின்படி கொல்லிமலை செங்கரை பவர்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரியும் முருகேசன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வழக்கின் முதற்கட்ட விசாரணையில் கொல்லிமலை பகுதிகளில் குழந்தைகளை வாங்கி சட்டவிரோதமாக விற்பனை செய்திருப்பதும், இதற்கு முருகேசன் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டதும் அம்பலமானது. தற்போது குழந்தை விற்பனை செய்த பெற்றோர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்றுவருகிறது.