நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள சோழசிராமணி கிராமத்தில் ஐந்து வயது சிறுமியை கடந்த 16ஆம் தேதி, அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவன் பாலியல் வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அச்சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
ஆனால், கரோனா பாதுகாப்பு பணி காரணமாக பெற்றோரின் புகாரை காவல்துறையினர் ஏற்க மறுத்துள்ளதாகக் கூறுப்படுகிறது. இதனையடுத்து கடந்த 20ஆம் தேதி காவல்துறையின் அவசர கட்டுப்பாட்டு அறையையும் தொடர்பு கொண்டு சிறுமியின் பெற்றோர் புகாரளித்துள்ளனர்.
இருப்பினும் அச்சிறுவன் மீது காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மனமுடைந்த சிறுமியின் பெற்றோர் இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளனர். இதையடுத்து, அருகிலிருந்தவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு நேரில் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு, சிறுமியின் பெற்றோர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, ஜோடார்பாளையம் காவல்துறையினர், சிறுமியின் பெற்றோர்களிடம் புகாரை ஏற்று அச்சிறுவன் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
இதையும் படிங்க: நெல்கொள்முதல் நிலையத்தின் இரவு காவலர் தற்கொலை!