நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள அன்னை சத்தியா நகர் பகுதியை சேர்ந்தவர் கோகிலா(55). இவர் நேற்று காலை திருப்பூரில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசுப் பேருந்தில் பயணம் செய்துக் கொண்டிருந்தார். பேருந்தானது கத்தேரி புறவழிச் சாலையின் அருகே வந்தபோது முன்புற படியின் அருகில் நின்றுகொண்டு கோகிலா நடத்துனரிடம் பயணச்சீட்டு பெற்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, அங்குள்ள வளைவு பகுதியில் அரசு பேருந்து வேகமாக திரும்பும் போது கோகிலா பேருந்தில் இருந்து கீழே விழுந்து அருகில் உள்ள கழிவுநீர் கால்வாயில் விழுந்தார். இதையடுத்து, பேருந்தில் பயணம் செய்த சக பயணிகள் கூச்சலிட்டதால் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கோகிலாவை மீட்டு சக பயணிகள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள கடையின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. பொதுவாக அனைத்து பேருந்துகளும் இப்பகுதியில் அதிவேகமாக இயக்கப்படுவதாகவும், இதுகுறித்து பலமுறை சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.
இதையும் படிங்க: சென்னையில் அரசுப் பேருந்து ஏறி வியாபாரி உடல் நசுங்கி உயிரிழப்பு: காணொலி வைரல்