நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கடந்த வாரம் பச்சிளங்குழந்தைகள் விற்பனை செய்ததாக ஓய்வு பெற்ற செவிலி அமுதா, அவரது கணவர் ரவிச்சந்திரன் உட்பட எட்டு பேரை ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் பச்சிளங்குழந்தைகளை இலங்கை, ஆந்திரா, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ததாக வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜு ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து குழந்தைகள் விற்பனை வழக்கினை தமிழ்நாடு அரசு சிபிசிஐடி வசம் ஒப்படைத்தது. இவ்வழக்கினை விசாரிக்க சேலம் துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் சேலம் ஆய்வாளர் சாரதா, நாமக்கல் ஆய்வாளர் பிருந்தா உள்ளிட்ட 10 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
சிபிசிஐடி காவல் துறையினர் இன்று நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குழந்தைகள் விற்பனை செய்தது தொடர்பாக இதுவரை விசாரணை செய்யப்பட்டவர்களின் வாக்குமூலம், அறிக்கைகள் அடங்கிய கோப்புகளை பெற்றுக்கொண்டனர். இக்குழுவானது நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணையை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.