கடந்த வாரம் ராசிபுரத்தில் நடத்த குழந்தை கடத்தல் விற்பனை தொடர்பாக அமுதா என்கிற செவிலி உள்ளிட்ட எட்டு பேரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில், விசாரணை சரியாக இருக்காது, வழக்கில் வெளிநாடுவரை குழந்தை விற்பனை நடைபெற்று இருப்பதாக வழக்கறிஞர் நல்வினை விஸ்வராஜ், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து தமிழக காவல் துறை இயக்குநர் இந்த வழக்கை இரு தினங்களுக்கு முன்பு சிபிசிஐடி விசாரிக்க கோரி உத்தரவு பிறப்பித்தார். இந்த குழுவில் சேலம் சிபிசிஐடி துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணன் தலைமையில் சேலம் ஆய்வாளர் சாரதா, நாமக்கல் ஆய்வாளர் பிருந்தா உள்ளிட்ட 10 பேர் கொண்ட விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நாளை அல்லது நாளை மறுநாள் விசாரணையை தொடங்க உள்ளனர்.