நாமக்கல்: திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரம் ஒன்றியம் - அவிநாசிபட்டி கிராமத்தில் 200 ஏக்கர் பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு சாகுபடி நடைபெற்று உள்ளது.
அப்போது மரவள்ளிக்கிழங்கு செடிகளை புதுவகையான மாவுப்பூச்சிகள் தாக்கியது தெரியவந்துள்ளது. இதனால் 100 ஏக்கர் பயிர்கள் சேதம் அடைவதாகவும், பூச்சி மருந்துகளை அடித்தும் பயனில்லை எனவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
கடந்த முறை மாவுப்பூச்சிகளை போக்கும் வகையில், தமிழ்நாடு அரசே ஒட்டுண்ணிப் பூச்சி வகைகளை வழங்கியதாகவும், இந்த முறை மாவுப்பூச்சிகள் புதிய விதமாக உள்ளதால், இதற்கு ஒட்டுண்ணிகள் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் கோயம்புத்தூர் வேளாண் துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஆத்தூர், சேலம், கோயம்புத்தூர், சத்தியமங்கலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சின்னசேலம் உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு செடிகளில் மாவுப்பூச்சி பாதிப்பு இருப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு ஹெக்டேருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்து, 10 மாதங்கள் வரை பாதுகாத்தால், ஒரு ஹெக்டேருக்கு 40 டன் மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் கூறினர்.
ஆனால், இந்த மாவுப்பூச்சியினால் ஆண்டுக்கு ஹெக்டேருக்கு 2 லட்சம் வரை கிடைக்க வேண்டிய வருவாய் பாதித்து ஒரு லட்சம் வரை நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த கடும் கரோனா காலத்தில் விவசாயிகள் பயிர்களை விற்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது போன்ற புது வகை மாவுப்பூச்சி தாக்குதல்கள் மிகுந்த வேதனை அளிப்பதாகவும், இதற்கு தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு தங்களுக்குத் தேவையான புதுவகை மாவுப்பூச்சிகளை அழிப்பதற்கான ஒட்டுண்ணிகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: வங்கியாளர்களுடன் அமைச்சர் பி.டி.ஆர். ஆலோசனை