நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா நடைபெறுகிறது. செம்மேட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவிக்க புதிய திராவிட கழகம் கட்சியினர் நாமக்கல்லில் இருந்து 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக சேந்தமங்கலம் வழியாக கொல்லிமலைக்கு சென்றனர்.
அப்போது சேந்தமங்கலம் பகுதியில் இருந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் தீரன் சின்னமலையின் நினைவு நாளை ஒட்டி அஞ்சலி செலுத்த வாகனங்களில் சேந்தமங்கலத்தில் இருந்து நாமக்கல் நோக்கி புறப்பட்டுள்ளனர். இரு தரப்பினரும் சேந்தமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவுண்டானாவில் சந்தித்த போது வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது.
அப்போது சிலர் அப்பகுதியில் இருந்த புதிய தமிழகம் கட்சியின் கொடிக்கம்பத்தில் இருந்த கொடியை கிழித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து, அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கும், புதிய திராவிட கழகம் கட்சியினருக்கும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினருக்கும் என மூன்று தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அங்கிருந்த கல், செங்கல், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் அங்கிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி உள்ளனர்.
இதில் 10-க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகளும் இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன. சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது. பதற்றமான சூழ்நிலையை அடுத்து சம்பவ இடத்திற்கு நாமக்கல் எஸ்பி சாய்சரண் தேஜஸ்வி மற்றும் போலீசார் விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பள்ளியில் மது அருந்தியவர்களைத் தட்டிக்கேட்ட இளைஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு; மூன்று பேர் கைது