நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதியன்று ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து நாமக்கல் வழியாக லாரியில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் நாமக்கல் முருகன் கோயில் அருகே லாரியை மடக்கிப் பிடித்த காவல் துறையினர், அதிலிருந்து, சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 300 கிலோ கஞ்சாவைப் பறிமுதல்செய்தனர்.
இதன் பிறகு லாரியை ஓட்டிவந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி பழனி (55), லாரி ஓட்டுநர் ராஜ்குமார் (34) ஆகியோரை காவல் துறையினர் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் 300 கிலோ கஞ்சாவை கடத்திய இருவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
அதனைத்தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் மெகராஜ் உத்தரவிட்டார்.