நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள வெள்ளக்கல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகன் கௌரிசங்கர் (15). இந்நிலையில் கௌரிசங்கர் தனது தாத்தா வேலுசாமியுடன் திருமணிமுத்தாற்றின் கரையோரம் உள்ள தங்களது வேளாண் நிலத்திற்குத் தண்ணீர் பாய்ச்ச சென்றுள்ளார்.
திருமணிமுத்தாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிக அளவு தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் தாத்தாவை திருமணிமுத்தாறு கரையிலேயே நிறுத்திவிட்டு கௌரிசங்கர் மட்டும் தண்ணீர் பாய்ச்ச ஆற்றில் இறங்கி நடந்துசென்றுள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவனின் கால் சேற்றில் சிக்கி, நீரில் மூழ்கியுள்ளார். இதைக்கண்ட வேலுசாமி கூச்சலிடவே, அருகிலிருந்தவர்கள் சிறுவனை மீட்க முயன்றனர். ஆனால் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், சிறுவனின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:நீச்சல் பழகச் சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!