நாமக்கல் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.பி.பி. பாஸ்கரை ஆதரித்து பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி பூங்கா சாலையில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது தெலுங்கில் பேசிய அவர், "நமது சமுதாயத்தை சேர்ந்த சாரதா, நாமக்கல் ஊராட்சி குழு உறுப்பினராக உள்ளார்.
வேறு எந்த கட்சியிலும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படுவதில்லை. ஆனால் அதிமுகவிலும் பாஜகவிலும் மட்டுமே உயர்ந்த பதவிகள் கொடுக்கப்படுகிறது. எனவே அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "அய்யர் கட்சியான பாஜகவில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த எல்.முருகனுக்கு மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவில் அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றுதான். திமுக தேர்தல் அறிக்கையில் கலப்பு திருமணம் செய்தால் 60 ஆயிரமும் ஒரு பவுன் தங்கமும் வழங்குவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியாவில் பலநூறு அங்கீகாரம் பெற்றுள்ள எந்த கட்சியும் இவ்வாறு ஒரு தேர்தல் அறிக்கை வெளியிடவில்லை. ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர், உயர் வகுப்பை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டால் 60 ஆயிரம் தருவேன் எனக் கூறி திமுகவினர் சாதிக் கலவரத்தை தூண்டுகின்றனர்" என்று குற்றஞ்சாட்டினார்.