நாமக்கல்: தமிழ்நாட்டின் பாஜக தலைவர் எல். முருகன் மத்திய இணை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டதையடுத்து பாஜகவின் புதிய தலைவராக அண்ணாமலை தேர்வு செய்யப்பட்டார்.
மேளதாளங்களுடன் வரவேற்பு
இந்நிலையில் புதிதாகப் பொறுப்பு ஏற்கவுள்ள அண்ணாமலை நேற்று (ஜூலை 14) கோவை முதல் சென்னை வரை சாலைமார்க்கமாக பாஜக தொண்டர்கள், நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்துப் பெற்று வருகிறார்.
இதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இன்று (ஜூலை 15) அண்ணாமலைக்கு பாஜகவினர் மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
'தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சரே எல்.முருகன்தான்'
இதனையடுத்து பாஜக தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், "ஊடகங்கள் பாஜக குறித்து தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அவர்களை மக்கள் கண்டுக்கொள்ளவேண்டாம்.
அடுத்த 6 மாசத்துல என்ன நடக்குதுன்னு நீங்க பாப்பீங்க.. மீடியாவை கண்ட்ரோல் பண்ணலாம். கையிலெடுக்கலாம். அத பத்தி நீங்க கவலைப்படாதீங்க.
ஏனெனில் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சராக எல்.முருகன் தற்போது உள்ளார். அதனால் தவறான செய்திகளை வெளியிட முடியாது" என்று தெரிவித்தார்.
அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்
அண்ணாமலையின் இந்த பேச்சால் தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. ஊடகங்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த, அண்ணாமலைக்கு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், ''ஊடகங்கள் விரைவில் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படும் என பாஜக மாநிலத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை பேசியது ஊடகங்களை மிரட்டும் செயல்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: அமித்ஷா பெரிய சங்கி; அண்ணாமலை சின்ன சங்கி!