நாமக்கல் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை சார்பாக, கருவுறுதலுக்கு முன் மற்றும் கருவிலிருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறிந்து தேர்வு செய்தலை தடை செய்யும் சட்டம் குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நாமக்கல்லில் நடைபெற்றது.
மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் சித்ரா தலைமையில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் பெண் குழந்தைகள் விகிதம் அதிகரிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து எடுத்துரைக்கப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து தடை செய்யும் சட்டம் பற்றியும் அதற்கான தண்டனைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கருத்தரங்கில் குடும்பநல திட்ட துணை இயக்குநர் டாக்டர் வளர்மதி பேசுகையில், ”2016-17ஆம் ஆண்டு நாமக்கல் மாவட்டத்தில் ஆண் பெண் பாலின விகிதம் 868 ஆக இருந்தது. பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் தற்போது இது 948 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் நாமகிரிப்பேட்டை, பரமத்தி, சேந்தமங்கலம், பள்ளிபாளையம், கபிலர்மலை, வெண்ணந்தூர் ஆகிய வட்டாரங்களில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைவாக உள்ளது. இதனை உயர்த்த மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்டோர் இணைந்து பணியாற்ற வேண்டும்.” எனக் கேட்டுக்கொண்டார்.