நாமக்கல் மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக விளங்கும் மூலிகை நிறைந்த பகுதியான கொல்லிமலையில் ஆகாய கங்கை அருவி, மாசிலா அருவி, நம் அருவி உள்ளன. மேலும் அரப்பளீஸ்வரர் கோயிலும் உள்ளது.
இந்தச் சுற்றுலாத் தலத்திற்கு உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாள்கள், முக்கிய விசேஷ நாள்களில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகைதருவார்கள்.
இந்நிலையில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகள் கொல்லிமலையில் நேற்று (ஜன. 01) ஏராளமானோர் குவிந்தனர். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (ஜன. 02) முதல் தேதி குறிப்பிடாமல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் கொல்லிமலைக்குச் சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்ல அனுமதிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
அதன் காரணமாக கொல்லிமலை அடிவாரமான காரவள்ளியில் உள்ள சோதனைச்சாவடியில் காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கொல்லிமலைக்கு உள்ளூர் மக்களைத் தவிர்த்து வேறு நபர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் தடுத்து நிறுத்தி அனைவரையும் திரும்பி அனுப்பிவருகின்றனர். எந்தவொரு முன்னறிவிப்பின்றி கொல்லிமலைக்கு விதித்த தடையால் சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.