நாமக்கல் மாவட்டம் பொத்தனூரைச் சேர்ந்த தம்பதி யுவராஜ்-அனிதா. இவர்கள் தங்களது இரண்டு மாத பெண் குழந்தை டெய்சிக்கு தடுப்பூசி போடுவதற்காக பாண்டமங்கலத்தில் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு செவிலி சரஸ்வதி குழந்தைக்கு தடுப்பூசி போட்டு, காய்ச்சல் சிரப்பு மருந்து ஒன்றும் வழங்கியுள்ளார். பின்னர் இவர்கள் வீட்டிற்கு வந்தவுடன், திடீரென்று குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
அப்போது சுகாதார நிலையத்தில் வழங்கிய காய்ச்சல் சிரப்பை குழந்தைக்கு கொடுக்கலாம் என்று எடுத்து பார்த்தபோது அந்த அட்டையில் காய்ச்சல் மருந்து என்றும் உள்ளிருந்து பாட்டிலில் வயிற்றுப் பூச்சி மருந்து என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து சம்பந்தப்பட்ட செவிலியிடம் நேரடியாகச் சென்று விளக்கம் கேட்டபோது அலட்சியத்துடன் செருக்குடனும் பேசியுள்ளார். மேலும் அந்தச் செவிலி, "நீங்கள்தான் சரியான மருந்துகளை பார்த்து வாங்கிக் கொள்ள வேண்டும்" என்றும் கூறியுள்ளனர்.
இது குறித்து பேசிய குழந்தையின் தாய் அனிதா, நாங்கள் படித்திருந்ததால் சுதாரித்துக் கொண்டோம் என்றார். மேலும், படிக்காத பெற்றோர் என்ன செய்வார்கள் என வேதனை தோய்ந்த குரலில் கூறினார்.
இதுபோன்று எத்தனை பேருக்கு மருந்துகளை மாற்றி வழங்கியுள்ளார்கள் என்று தெரியவில்லை என அச்சம் தெரிவித்த அனிதா, இதுபோன்ற துணை சுகாதார நிலைய மருத்துவமனையில் அலட்சியமாக நடந்து கொள்ளும் செவிலியர், பணியாளர்கள் மீது சுகாதாரத் துறை அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதையும் படியுங்க: