நாமக்கலை அடுத்த தூசூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். கபடி விளையாட்டு வீரரான இவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். விக்ரம் ரசிகரான இவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் தேதி விக்ரம் ரசிகர் மன்ற பேனரை தூசூர் பேருந்து நிறுத்தம் அருகே வைக்க முற்பட்டுள்ளார். அப்போது அங்கு வந்த ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், ரகுமான், தனபால், ராஜேஷ், மணிகண்டன், கர்ணா மூர்த்தி உள்ளிட்டோர் அப்பகுதியில் பிளக்ஸ் பேனர் வைக்கக்கூடாது என மணிகண்டனுடன் தகராறு செய்துள்ளனர். அதில் ராமச்சந்திரன் தரப்பினர் மணிகண்டனை கத்தியால் குத்தி கொலை செய்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக நாமக்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றம்சாட்டப்பட்ட ராமச்சந்திரன், ரவிசந்திரன், ரகுமான், தனபால், ராஜேஷ், மணிகண்டன், கர்ணா மூர்த்தி ஆகிய ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தனசேகரன் உத்தரவிட்டார். இதனையடுத்து ஏழு பேரும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.