திருவாடனை சட்டப்பேரவை உறுப்பினரும், தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவருமான கருணாஸ், நடிகர் சங்க தேர்தல் வாக்கு சேகரிக்க இன்று நாமக்கல் வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நடிகர் சங்க கட்டடம் கட்டும் இடத்தை அடமானம் வைத்து, கடன் வாங்கி கட்ட வேண்டும் என்ற எண்ணம் இல்லை. தனது உயிர் பாதுகாப்பு கருதிக் கடந்த ஒரு ஆண்டாக திருவாடனை தொகுதிக்கே செல்லவில்லை. அரசு அலுவலர்கள் தன்னை எந்த ஒரு அரசு விழாவிற்கும் அழைப்பது இல்லை. தன்னை வேண்டுமென்றே புறக்கணிப்பதற்கு, அமைச்சர் மணிகண்டன்தான் காரணம்.
இது குறித்து இருமுறை முதலமைச்சரை சந்தித்து புகார் தெரிவித்தும், அவர் எவ்வித நடவடிக்கை எடுக்க வில்லை. தனது தொகுதியில் நடந்த மணல் கொள்ளையைத் தட்டி கேட்டதால், இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். ஆனால் குற்றவாளிகளை காவல்துறை இதுவரை ஏன் கைது செய்யவில்லை. இந்தியை விருப்பம் இருந்தால் மட்டுமே கற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்தியை ஒருபோதும் திணிக்கக் கூடாது" என்று கூறினார்.
அமமுக குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "சசிகலாவும் தனது நெருங்கிய உறவினர்கள்தான். எப்போதும் எனது சமுதாயத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன். நான் ஒரு சாதிக்கட்சிதான் வைத்து நடத்தி வருகிறேன். அதனால் என்ன... நான் ஒரு சாதிக் கட்சித் தலைவர்’ என்று கூறினார்.