நாமக்கல்: மின்சாரத் துறைக்கு நிவர் புயலால் 64 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று தமிழ்நாடு அரசின் 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புகளில் சேர்ந்த 10 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மின் துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளை பாராட்டி பரிசுகளை வழங்கினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மின் துறை அமைச்சர் தங்கமணி, நிவர் புயலால் மின் வாரியத்திற்கு 64 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், முழுமையான சேதங்களை கணக்கெடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், புரெவி புயலை எதிர் கொள்ள மின் வாரியம் தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், புயல் கரையை கடக்கும் போது பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் எனவும், புயலுக்கு பின் ஆய்வு செய்து, பாதிப்பில்லாத பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.