நாமக்கல்-சேலம் சாலையில் நெடுஞ்சாலைத்துறையினர் சாலை விரிவாக்கப் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு சாலையின் ஓரத்தில் கால்வாய் வெட்டும் பணியும் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பல மரங்கள் அகற்றப்படுகின்றன. அவற்றில் கருப்பக்கவுண்டர் வளைவு அருகே 60 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசமரத்தையும் அகற்றப்பட வேண்டிய தேவையிருந்தது.
இதையடுத்து அம்மரத்தை வேரோடு பிடுங்கி வேறு இடத்திற்கு மாற்ற நெடுஞ்சாலைத்துறையினர் முடிவெடுத்தனர். அதனால் அம்மரத்தின் பெருங்கிளைகள் அனைத்தும் கழிக்கப்பட்டன. பின் ஏற்கனவே இதுபோன்ற மரங்களை மறுநடவு செய்து பராமரித்து வரும் துளிகள் என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து, அம்மரம் கிரேன் உதவியுடன் வேரோடு வெளியே எடுக்கப்பட்டது.
பின்னர் அதனை லாரியில் ஏற்றிய பணியாளர்கள், முதலைப்பட்டி அருகே உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில் பள்ளம் தோண்டி மீண்டும் நடவு செய்தனர். நெடுஞ்சாலைத்துறையின் இச்செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: கடலூரில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடவுள்ள முதலமைச்சர்!