நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பீமநாயக்கனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோயில் திருவிழா பல்வேறு தடைகளைத் தாண்டி வெகு விமரிசையாக நேற்று முதல் நடைபெற்றுவருகிறது.
இந்த விழாவை சிறப்பிக்கும் வகையில் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் இன்று காலையில் நேர்த்திக்கடனாக கரகம் எடுத்து ஆடிவந்தனர்.
இதன் பின்பு அம்மனுக்கு விருந்து படைக்கும் விதமாக கெடாவெட்டும் நிகழ்ச்சி ஆரவாரமாக நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகளை இங்குள்ள கோயிலில் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
இதில் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய காவல் தெய்வங்களுக்கு 50 கிலோவில் இருந்து 100 கிலோ வரையிலான ஆடுகளை தங்களுடைய கடவுளுக்கு காணிக்கையாக செலுத்தினர்.
இந்நிலையில்,மிகப்பெரியளவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று தங்களுடைய ஆடுகளை காணிக்கையாக்கினர். இந்த நிகழ்வு பார்ப்பதற்கு போர்க்களம் போல் காட்சியளித்தது.
மேலும், மாரியம்மன், காளியம்மன் கோயில் திருவிழாவை நடத்தக் கூடாது என கடந்த வாரம் ஒரு தரப்பு மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.