நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குழந்தைகள் மையம், சத்துணவு மையம், சகி - ஒருங்கிணைந்த சேவை மையம், அங்கன்வாடி மையம், போதை ஒழிப்பு மையம், முதியோர் இல்லம் மற்றும் மனவளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளி ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன் நேற்று (ஜனவரி 19) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் சமுக நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில் சமூக நலத்துறை சார்பில் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதே போல் குழந்தை திருமணங்கள் தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் எனவும் அமைச்சர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், நாமக்கல் மாவட்டத்தில் கடந்தாண்டு 165 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு முழுவதும் குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்த பல்வேறு விழிப்புணர்வுகளை நடவடிக்கைகளை அரசு ஏற்படுத்தி வருகிறது.
குறும்படங்கள் மற்றும் விழிப்புணர்வு பேரணிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது. இதனால் பல கிராமங்களில் குழந்தை திருமணங்கள் நடப்பதற்கு முன்னதாகவே சிறார்கள் தகவல் தெரிவித்துவிடுகிறார்கள். அதன்பின் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் புதிதாக 10 சகி மையங்கள் திறக்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 1,200 பள்ளிகளில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி கட்டடங்களில் பண்டக வைப்பக அறை மற்றும் சமையலறையை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை தடுக்க குழு அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பட்டு வருகிறது. அவர்களுக்கு தக்க மனநல ஆலோசனை வழங்கப்படுவதாகவும், 1098, 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் குறித்து அதிகளவு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நாமக்கலில் பெண்களுக்கான ஜல்லிக்கட்டு - கோழியைப் பிடித்து வென்றவர்களுக்கு பரிசு