நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்திற்கு உட்பட்ட பரமத்திவேலுார் அடுத்துள்ள ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் மாதம் 11-ஆம் தேதி இளம் பெண் ஒருவர் ஆடு மேய்க்கச்சென்றிருந்த போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.
அதனையடுத்து காவல்துறையினர் வடமாநிலத்தைச் சார்ந்த 17 வயது சிறுவனைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் போலீசார் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை எனக் கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள், வடமாநில தொழிலாளிகள் வசித்த இடங்களை சூறையாடினர். மேலும் விவசாய உபகரணங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களும் நிகழ்ந்தன. வட மாநிலத்தவர்கள் தங்கி இருந்த இடங்களுக்கு தீ வைப்பது, போன்ற பல வன்முறை செயல்களில் ஈடுபட்டனர்.
அந்த வன்முறைச் சம்பவத்தில் தூங்கிக் கொண்டிருந்த வடமாநில தொழிலாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்த நிலையில் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த வழக்கை அப்போதைய டிஜிபி சைலேந்திர பாபு சிபிசிஐடி காவல்துறையினருக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார்.
இதனை அடுத்து கடந்த 6 மாதங்களாகத் தொடர்ந்து நடைபெற்ற ஜேடர்பாளையம் வன்முறை சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், உயிரிழந்த இளம்பெண்ணின் உறவினர்கள் 10 பேரை தற்போது காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அதன்படி, சிவராஜ், மதியழகன், விஜயன், சூரியா, பழனிச்சாமி, தனுஷ், பரணி, பூபதி உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் பூபதி என்பவர் உயிரிழந்த பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் கணவரின் சகோதரர் ஆவார். இளம் பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், தற்போது பெண்ணின் உறவினர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கடலூரில் திமுக நிர்வாகி மீது ஓபிஎஸ் தரப்பு நிர்வாகி துப்பாக்கிச் சூடு!