மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பாதரகுடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கரோனா தொற்று ஊரடங்கால் பாதிக்கபட்ட மக்களுக்கு கடந்த 20 நாள்களாக மூன்று வேலை உணவும், குடிநீரும் வழங்கி வருகின்றனர்.
ஆதரவற்றோர்களுக்கு, தன்னார்வலர்கள் அவ்வப்போது உணவு வழங்கி வரும் நிலையில், கிராம பகுதியில் நிலையின்றி வாழும் நரிகுறவர் மக்களின் நிலை மிகவும் பாதிக்கபட்டுள்ளது. இதனையறிந்த பாதரக்குடி இளைஞர்கள் பாதிக்கபட்ட குடும்பத்தினரை சந்தித்து மூன்று வேலை உணவு வழங்குவதாக உறுதியளித்தனர்.
அதன்படி தங்களது சுய நிதி பங்களிப்புடன் இளைஞர்களே இணைந்து மூன்று வேலையும் சுகாதாரமான உணவு தயார் செய்து் வழங்கி வருகின்றனர். புத்தூர் கிராமத்தில் பழுதடைந்த வீடுகளில் வசிக்கும் 60க்கும் மேற்பட்ட நரிகுறவர் குடும்பத்திற்கு குறித்த நேரத்திற்கு உணவுகளை வழங்கி வருகின்றனர்.
பாதரக்குடி இளைஞர்களின் சேவையை சமூக வலைதளங்களின் மூலம் அறிந்த பொதுமக்கள் உணவிற்கான நிதியையும் வழங்கி வருகின்றனர்.
இதனால் உற்சாகமடைந்த இளைஞர்கள், சீர்காழி,வைத்தீஸ்வரன்கோயில்,கொள்ளிடம் வரை அடுத்தடுத்த கிராமங்களிலும் பாதிக்கபட்ட மக்களை அடையாளம் கண்டு, ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வருகின்றனர்.