மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூர் வடக்கு தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் கதிரவன் (36) என்ற இளைஞர். கிராமத்தில் சாக்கடை கழிவுநீர் ஒட்டு மொத்தமாக வீரசோழன் ஆற்றில் விடப்படுவதால் ஆறு மாசடைந்து நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருவதாகவும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த மே மாதம் 26ஆம் தேதி ஆற்றின் நடுவே தலைகீழாக சிரசாசனத்தில் நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.
அவ்வழியாக சென்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா சம்பவத்தை பார்த்து இளைஞரிடம் போராட்டத்தை கைவிட வலியுறுத்தினார். உடனடியாக அலுவலர்களை நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தமிழ்நாடு முதல்வர் தனி பிரிவு மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் என பல்வேறு துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த இளைஞர் கதிரவன் இன்று காலை மணிக்கு சங்கரன்பந்தலில் உள்ள செல்போன் கோபுரத்தில் மீது ஏறி தலைகீழாக நின்று சிரசாசனம் செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
2 நேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்த நிலையில் அப்பகுதியில் பொதுமக்கள் குவிந்தனர். மேலும் பொறையார் போலீசார் மற்றும் தரங்கம்பாடி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞரை கீழே இறங்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர். முதலமைச்சரின் தனி பிரிவுக்கு அளித்த மனுவையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் அலுவலர்களுக்கு அனுப்பிய மனுக்களையும் செல்போன் டவரின் கீழே கட்டி மாலை அணிவித்து உள்ளார்.
இளைஞரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொறையார் போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம்; மயிலாடுதுறை விவசாயி மகள் சாதனை