உலகம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றுப் பரவலும் இறப்பு எண்ணிக்கையும் உச்சத்தைத் தொட்டுள்ளது. கரோனா பரவாமலிருக்க மக்கள் தனி மனித இடைவெளியைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் மளிகைக் கடை, காய்கறிக் கடை உள்ளிட்ட இடங்களில் தனி மனித இடைவெளியை சரியாக நடைமுறைப்படுத்தவும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்களைக் கண்காணிக்கவும் போதிய காவலர்கள் நம்மிடையே இல்லை.
இதனை சமாளிக்கும் வகையில், ’ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ என்கின்ற குழுவில் இளைஞர்கள் தாமாகவே முன்வந்து இணைந்து சேவை செய்து வருகின்றனர். இதன்படி, நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் இன்று 70க்கும் மேற்பட்ட இளைஞர்கள், காவல்துறையினரின் நண்பர்கள் எனப்படும் இந்த ’ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ்’ குழுவில் இணைந்தனர்.
தொடர்ந்து காவல் ஆய்வாளர் மணிமாறன் முன்னிலையில், களத்தில் அவர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. ஒவ்வொருவருக்கும் மூன்று மணி நேரம் மட்டுமே தற்போது பணி வழங்கப்பட்டுள்ளது. இவர்களின் இந்தப் பணிகள் சுழற்சிமுறையில் நடைபெறும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: அத்தியாவசிய நிறுவனங்களுக்கான அனுமதி - இணையத்தில் விண்ணப்பிக்க மாநகராட்சி அறிவுறுத்தல்!