நேபாளத்தில், கடந்த வாரம் சர்வதேச அளவிலான பின்னோக்கி செல்லும் நீச்சல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் கலந்து கொண்ட மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஆல்ரின் ஆம்ஸ்ட்ராங், தங்கப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், எரவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆல்ரின் ஆம்ஸ்ட்ராங். இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.கடந்த ஜனவரி மாதம் இறுதியில் கோவாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்ற இவர், தடைகளைத் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். அதன் மூலம் சர்வதேசப் போட்டிக்கு தகுதி பெற்றார்.
தொடர்ந்து, நேபாள நாட்டின் பொக்ராவில் நடைபெற்ற (மார்ச் 15-19ஆம் தேதி வரை) சர்வதேசப் போட்டிகளில் ஒன்றான பின்னோக்கி நீந்துதல் போட்டியில் ஆல்ரின் கலந்து கொண்டார். இதில் 100 மீட்டர் பிரிவில் கலந்து கொண்டு ஒரு நிமிடம் 09.36 நொடிகளில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றார்.
வெற்றிக்கனியை ருசித்த கையோடு தன் சொந்த மாவட்டமான மயிலாடுதுறைக்குத் திரும்பிய ஆல்ரின் ஆம்ஸ்ட்ராங்குக்கு, நாம் மக்கள் இயக்கத்தின் சார்பில் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆல்ரின் ஆம்ஸ்ட்ராங், ”சிறுவயது முதல் நீச்சல் போட்டியில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு. அதனால் ஏரவாஞ்சேரி கிராமத்தில் உள்ள ஊர் பொதுக்குளத்தை சுத்தம் செய்து, அங்கு நீச்சல் பயிற்சி பெற்றேன். பயிற்சியாளர் யாரும் இல்லை. ஒற்றையாளாக தன்னம்பிக்கையுடன் நீச்சல் பயிற்சி செய்தேன். அதன் பலனாக சர்வதேச அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது மகிழ்ச்சியளிக்கிறது” என்றார்.
இதையும் படிங்க:'மதுர பாஷைதான் இந்த விருதுக்கு காரணமே' - குழந்தை நட்சத்திரம் நாகவிஷால்