மயிலாடுதுறை: கீழ மாப்படுகை கிட்டப்பா நகரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள்அனிதா (29). சாரதட்டைத் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் மோகன்ராஜ் (29). இருவேறு சமூகத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும், கல்லூரியில் படிக்கும் காலத்தில் அறிமுகம் உண்டாகி பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில், அது காதலாக மாறியுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து அனிதாவும், மோகன்ராஜூம் மிக நெருங்கி பழகி வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக அனிதாவிடம் மோகன்ராஜ் உறுதியளித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் சாதியை காரணம் காட்டி அனிதாவை மோகன்ராஜ் திருமணம் செய்ய மறுத்து வந்துள்ளதாக தெரிய வருகிறது.
இதனைத் தொடர்ந்து, அனிதா மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மோகன்ராஜ் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கோப்பெருந்தேவி மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பெண்ணைக் கட்டாயப்படுத்தி உறவில் ஈடுபட்டது, நம்பிக்கை மோசடி செய்தது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழும், வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், மோகன்ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மயிலாடுதுறையில் உள்ள கிளைச்சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்புணர்வு: இளைஞர் கைது