நடிகர் ரஜினிகாந்த் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்று அறிவித்து சுமார் மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், அவர் இதுவரை கட்சி ஏதும் தொடங்கவில்லை.
இந்நிலையில், அவரது உடல்நிலையின் காரணமாக பொதுவெளிக்குச் செல்ல வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக சமீபத்தில் அவர் குறிப்பிட்டார். அதன் காரணமாக இனி அவர் கட்சி தொடங்கமாட்டார் என்பது போன்ற செய்திகள் உலாவருகின்றன.
இருப்பினும், ரஜினியின் ரசிகர்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவருகின்றனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஜினிக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்படுகின்றன.
நடிகர் ரஜினிகாந்த் தனது நிலைப்பாட்டை விரைவில் அறிவிக்க வேண்டும். விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என அந்தச் சுவரொட்டிகளில் வலியுறுத்தப்படுகிறது.
இந்நிலையில் நாகப்பட்டினம் அக்கரைகுளம் பகுதியைச் சேர்ந்த விநாயகர் மகளிர் சுய உதவிக்குழுவினர், "கஜா புயல் பாதித்த ஏழைகளுக்கு உதவிக்கரம் நீட்டிய தலைவா தமிழ்நாடு மக்களையும், தமிழ்நாட்டையும் காத்திட வா... தலைவா வா... தலைமையேற்க வா!" எனச் சுவரொட்டி அச்சடித்து பல்வேறு பகுதிகளில் ஒட்டியுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த இன்னும் கட்சியே தொடங்காத நிலையில் அவருக்கு வாக்களிக்கக் கூறி விநாயகர் மகளிர் சுய உதவிக் குழுவினர் வீடு வீடாக பரப்புரையில் ஈடுபட்டனர்.
இதைபோல, ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் சுற்றுவட்டாரப் பகுதி, பேருந்து நிலையத்தில் ரஜினிக்கு ஆதரவாகச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், 2021 ஆன்மிக அரசியல் இப்ப இல்லனா? எப்பவும் இல்லை போன்ற வாசகங்களும், ஏர்பிடித்த உழவனை ஏந்திபிடி உரிமைக் குரலை உயர்த்திப்பிடி, கூப்பிட்ட குரலுக்கு உரிமை குரல் கொடு வா தலைவா வா! என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. விவசாயப் பெருங்குடி மக்கள் பார்த்திபனூர் சுற்றுவட்டார பகுதி என்ற பெயரில் இந்தச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:ரஜினி அரசியலுக்கு வர வேண்டி மும்மத பிரார்த்தனை