மயிலாடுதுறை மாவட்டம் மறையூர் ஊராட்சிக்குள்பட்ட கோவங்குடி கிராமத்தில் சின்னகுளம் என்ற நீர்நிலை அமைந்துள்ளது. இந்தக் குளத்தின் மேலே இன்று (மார்ச் 27) காலை 8.30 மணி அளவில் ராணுவப் பயிற்சி விமானம் மிகவும் தாழ்வாகப் பறந்துள்ளது.
சிறிது நேரத்தில் குளத்தில் பலத்த சத்தத்துடன் அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்துள்ளனர். பலத்த சத்தத்துடன் கூடிய இந்த அதிர்வு மயிலாடுதுறை சுற்றுவட்டாரத்தில் முப்பது கிலோமீட்டர் வரை உணரப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவங்குடி கிராமத்தில் நிகழ்ந்த சம்பவம் குறித்து அறிந்த வட்டாட்சியர் பிரான்சுவா நேரடியாகச் சென்று சோதனை மேற்கொண்டார். விசாரணையில் பயிற்சி விமானத்தில் ஏர்லாக் கிளியர் செய்வதற்காக, நீர்நிலைகளில் காற்றை திறந்துவிடும்போது அதிர்வுடன்கூடிய சத்தம் வந்தது என்பது தெரியவந்தது.
இது குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று வட்டாட்சியர் பிரான்சுவா தெரிவித்த பிறகே பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
இதையும் படிங்க: வங்க தேச காளி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு!