மயிலாடுதுறை அருகே நல்லத்துக்குடி ஊராட்சியில் உடையார்குளம், பிடாரி குளம், பெரியகுளம், அம்மாகுளம், பாப்பான்குளம், ஆவிகுளம், அல்லிகுளம், அட்டகுளம், ஆண்டிகுளம் மற்றும் இரண்டு குட்டைகள் உள்ளன.
இந்த ஆண்டு, காவிரியிலிருந்து ஜூன் 12ஆம் தேதி பாசனத்துக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் இந்த நீரை நல்லத்துக்குடி ஊராட்சியில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் நிரப்ப வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.
ஆனால், நீர்வழிப்பாதைகளில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளின் காரணமாக குளங்களுக்குத் தண்ணீர் செல்லவில்லை.
இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், நல்லத்துக்குடி உடையார்குளத்தில் இறங்கி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, குளங்களுக்குச் செல்லக்குடிய நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி குளங்களுக்கு நீர் நிரப்ப வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.