மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா அல்லிவிளாகம் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி (52). கூலி தொழிலாளியான இவர் காத்திருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே காலி பாட்டில்களை சேகரித்து வருகிறார். வழக்கம் போல் ரவி காத்திருப்பு டாஸ்மாக் கடை அருகே அமைந்துள்ள நான்கு வழிச்சாலை விரிவாக்க பணியை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் வளாகத்திற்குள் சென்று அங்கு கிடந்த காலி பாட்டில்களை சேகரித்துள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக தனியார் நிறுவனத்தினர் அமைத்திருந்த மின்விளக்கு கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த தகவலை அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து தனியார் சாலை அமைக்கும் ஒப்பந்த நிறுவன வளாகத்தில் இருந்த உயிரிழந்த ரவியின் உடலை எடுக்க மறுத்தனர். மேலும் அவருக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும் காத்திருப்பு கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் சீர்காழி - நாகை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தகவலறிந்த காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், பேச்சு வார்த்தை தோல்வியடைந்த நிலையில் தொடர்ந்து சாலைமறியல் நடைபெற்று வருகிறது.
தற்போது அந்த பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் வைத்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே எந்தவித தவறுகளும் நடந்து விடாமல் தவிர்க்க, அப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: மெரினாவில் நினைவு சின்னம் எழுப்ப அரசாணை வெளியிட வேண்டும் - மே 17 இயக்கம் கோரிக்கை