நாகை: தென் இந்தியாவில் உள்ள சைவ ஆதீனங்களில் முதன்மையான ஆதீனம் திருவாவடுதுறை ஆதீனம். இந்த ஆதீனம் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாடுதுறையில் அமைந்துள்ளது. கி.பி.14ஆம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட இந்த ஆதீனத்தின் 24ஆவது குருவாக சந்நிதானமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார்.
இந்த ஆதீனத்தில் நடைபெற்ற ஆன்மார்த்த மூர்த்தி பூஜையில் 24ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அடியார் சிவசங்கரன் என்பவருக்கு கல்லாடை யாத்திரை கஷாயம் கொடுத்து வேலப்ப சுவாமிகள் என்ற தீட்சாநாமம் வழங்கி, ஆதீன திருக்கூட்டத்தில் சேர்த்துக் கொண்டார்.
இந்த வேலப்ப சுவாமிகள் என்று தீட்சாநாமம் பெற்ற சிவசங்கரன், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர். பி.டெக்., முடித்த இவர் ஆன்மீகத்தின் மீது கொண்ட நாட்டத்தால் ஆதீனம் குருமகா சன்னிதானம் ஆசியுடன் இப்போது துறவறம் ஏற்றுள்ளார். இவர் இந்திய விடுதலைக்காக பாடுபட்ட செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரநாரின் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.