நாகப்பட்டினம்: கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வெள்ள நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் மேட்டூர் அணையின் முழு கொள்ளளவு எட்டியதால் நீர் வெளியேற்றப்பட்டது. .
இந்த நீர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கடந்து பழையாறு அருகே கடலில் கலந்து வருகிறது. இதன் காரணமாக கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடுதிட்டு, வெள்ளைமணல், உள்ளிட்ட கிராமங்கள் தண்ணீர் சூழ்ந்து துண்டிக்கப்பட்டது.
இப்பகுதியைச் சேர்ந்த மக்கள் நான்கு முறை நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்து மீண்டும் தங்கள் வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி அன்று கொள்ளிடம் ஆற்றின் நடுவே அமைந்துள்ள குலதெய்வ கோயிலின் வழிபாட்டிற்காக ஆற்றை கடந்து செல்ல முற்பட்ட சந்தைக்குபடுகை கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி மாரியப்பன் தண்ணீரில் மூழ்கி மாயமானார்.
அன்றே அவரது உடலை தேடும் பணி தீயணைப்பு துறையினர் உதவியுடன் நடைபெற்றது. ஆனால் வெள்ள நீரின் அளவு அதிகரித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டிருந்தது. 23 நாட்களுக்கு பிறகு தண்ணீரின் அளவு முழுவதுமாக குறைந்ததால் இன்று வருவாய் துணையிறனர் மற்றும் கிராம மக்கள் கூலி தொழிலாளி மாரியப்பனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்பொழுது நாதல்ப்படுகை மற்றும் சந்தைப்படுகை கிராமத்துக்கு இடையேயான பகுதியில் முதலை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த மீட்பு குழுவினர் உடனடியாக கரை பகுதிக்கு திரும்பினர். இதனால் மாரியப்பனை தேடும் பணி தடைபட்டது.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் திறக்கப்பட்டதால் அணைக்கரையில் இருந்து வெளியேறிய முதலைகள் கிராம பகுதிகளில் தஞ்சம் அடைந்திருக்கலாம் என்ற அச்சம் அப்பகுதி மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக இப்பகுதியில் உள்ள கரையோர கிராமங்களில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு ஆற்றின் கரையோர கிராமங்களில் தஞ்சம் அடைந்துள்ள முதலைகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: கடற்கரையில் திடீரென கரை ஒதுங்கிய ஆயிரக்கணக்கான மீன்கள்