நாகை மாவட்டம் விழுந்தமாவடி பேருந்து நிறுத்தம் அருகில் அரசின் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. மக்கள் கூடும் இடத்தில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால், குடிகாரர்களின் தொந்தரவு காரணமாக அப்பகுதி மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ந்து பலமுறை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதற்கு அதிகாரிகள் செவி சாய்க்காத காரணத்தால், இன்று (செப்.) டாஸ்மாக் கடையை தாங்களாக மூட அப்பகுதி கிராம பெண்கள் முடிவெடுத்தனர். இதனால் அப்பகுதியில் காலையில் இருந்து காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட முயற்சி செய்தனர்.
அப்போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கடையை விரைந்து மூட நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இருந்தபோதிலும் நாகை டிஎஸ்பி முருகவேல் தலைமையில் பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது ஒருபுறம் இருக்க டாஸ்மாக் கடையை மூடக்கூடாது என்றும், அதிக விலைக்கு மது விற்பனை செய்ய படுவதாகவும் குடிமகன்கள் டாஸ்மாக் கடை முன்பு குவிந்தந்தால் பரபரப்பு ஏற்பட்டது.