நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் திருமண நிகழ்ச்சியொன்றில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று பொது மக்கள் சுய ஊரடங்கு கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருகின்றனர்.
இதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையில் நான் பங்கேற்ற நிகழ்ச்சிகள் அனைத்தையும் காலை 5 மணி முதல் 7 மணிக்குள் முடித்து விட்டேன். மீண்டும் இரவு 9 மணிக்கு மேல் சென்னைக்கு புறப்பட உள்ளேன்" என்றார்.
தேமுதிக - அதிமுக கூட்டணி பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அவர், "எம்.பி., பதவிக்கு ஜி.கே வாசன் தகுதியான நபர். எங்களுக்கு அடுத்த முறை அதிமுக வாய்ப்பளிக்கும் என்று கூட்டணி கட்சி என்ற முறையில் நம்புகிறோம். வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தெரிவித்தார்.
மேலும் "தமிழ்நாட்டில் இளைஞர்கள் எழுச்சியுடன் தான் காணப்படுகின்றனர். அரசியலில் வெற்றிடம் என்பது இல்லை. அவரவர் கட்சியில் வேண்டுமானால் வெற்றிடம் உள்ளது. வெற்றிடம் பற்றி பேசும் நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி ஆரம்பித்து உள்ளாட்சித் தேர்தலில் அவர் ஆட்களையே அனைத்து இடங்களிலும் போட்டியிடச் செய்து தனது கட்சியில் வெற்றிடம் இல்லை என்று நிரூபித்து விட்டு, தமிழக அரசியல் வெற்றிடம் பற்றி பேசட்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: ரூபாய் நோட்டு மூலம் பரவுமா கரோனா - அதிர்ச்சியளிக்கும் புதிய தகவல்!