கரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள தொகைக்கு, நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அலுவலர்கள் கமிஷன் பெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்களுக்கு ரகசிய புகார்கள் வந்துள்ளன.
இதையடுத்து நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையிலான காவலர்கள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது கணக்கில் வராத 1 லட்சத்து 64, 500 ரூபாய் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் நாகை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் செபஸ்திஅம்மாள், பஞ்சாயத்து கிளார்க் உள்ளிட்ட பணியாளர்களிடமிருந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் பணத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும் அலுவலக பணியாளர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சமீபத்தில் நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சமூக நலத்துறை அலுவலகம், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், வட்டார போக்குவரத்து துறை அலுவலகம், நாகை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் என லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனையில் அரசு அலுவலர்கள் சிக்கி வருவது, மற்ற அரசுத் துறை அலுவலர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க... கரூரில் லஞ்சம் வாங்கிய போர்மேன் கைது!