வேளாங்கண்ணி: உலக புகழ்பெற்ற, வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டுப் பெருவிழாவானது, ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு திருவிழா இன்று (ஆகஸ்ட் 29) மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
10 நாட்கள் நடைபெறும் திருவிழாவைக் கொண்டாட, வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர். இந்நிலையில், திருவிழாவையொட்டி தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகப் பேராலய அதிபர் இருதயராஜ் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணியில் அமைந்துள்ள “புனித ஆரோக்கிய மாதா பேராலயம்”, கீழ்த்திசை நாடுகளின் “புனித லூர்து நகரம்” என்று அழைக்கப்படுகிறது. ஆரோக்கிய அன்னையின் பிறந்தநாளைக் குறிக்கும் விதத்தில் கொண்டாடப்படும் இந்த பெருவிழாவின், மாலை நடைபெறும் கொடியேற்றத்தைக் காண, தமிழ்நாடு மட்டும் இன்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக, வேளாங்கண்ணிக்கு வருவது வழக்கம்.
இதையும் படிங்க: "நீட்டால் நிகழ்ந்தது தற்கொலை அல்ல.. ஒன்றிய அரசால் செய்யப்பட்ட கொலை" - உதயநிதி ஸ்டாலின்!
அதனைத்தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கானோர் தற்போது குவிந்துள்ளனர். இதனால் வேளாங்கண்ணியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றது. இந்நிலையில், வேளாங்கண்ணி முழுவதும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை உட்பட 11 மாவட்டங்களிலிருந்து தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன் தலைமையில், 3 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுட்டுள்ளனர்.
மேலும், பயணிகளின் உடைமைகள் ஸ்கேன் செய்த பிறகே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மெட்டல் டிடெக்டர் உதவியுடன், காவல்துறையினர் சோதனை செய்கின்றனர். 10 நாட்களும் மாதா மன்றாட்டு, கூட்டுப்பாடல் திருப்பலி, நற்கருணைஆசிர், ஆகியவை கொங்கனி, மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், அரசுப் போக்குவரத்துக்கழகம் சார்பில், 500சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தெற்கு ரயில்வே சார்பில், பல்வேறு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 20க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள், 60 கண்காணிப்பு கேமராக்கள் நான்கு ஆளில்லா விமானம் மூலம் கண்காணிக்கப்படுகிறது.
அதனைத்தொடர்ந்து, வேளாங்கண்ணி கடற்கரையில் இன்று முதல் வரும் எட்டாம் தேதி வரை பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் கடலோர காவல் படை போலீசார் மற்றும் உதவி கரங்கள் தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நகர்புறங்களில் சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவத் திட்டம் - அமைச்சர் மா.சு!