கீழைநாடுகளின் லூர்து நகரம் என்று அழைக்கப்படும் புனித ஆரோக்கியமாதா பேராலயம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற இந்த பேராலயம் மத வேறுபாடுகளின்றி அனைவராலும் தரிசிக்கப்படும் புனிதத் தலமாகும். தூய ஆரோக்கிய அன்னையின் பெயரால் கட்டப்பட்டுள்ள இந்த பேராலயம், இந்தியாவில் உள்ள கத்தோலிக்க திருத்தலமாகும். இங்குள்ள கண்ணி மரியா வேளாங்கண்ணி மாதா என்று அழைக்கப்படுகிறார். நம்பிக்கையுடன் அன்னையை வேண்டிக்கொள்ளும் அனைவரின் உடல், உள்ளக் குறைகளைத் தீர்ப்பதாகவும் ஐதீகம்.
காட்சி தந்த அன்னை மரியா
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தின் புகழ் உலகளவில் பரவியிருப்பதற்கு பல காரணங்கள் உண்டு. எனினும், முக்கியமாக அன்னையின் மகிமைகளாக மூன்று நிகழ்வுகள் சொல்லப்படுகின்றன. முதலாவதாக, 1592ஆம் ஆண்டு பண்ணையார் ஒருவருக்கு பால் கொண்டு சென்ற இந்து சிறுவனுக்கு வேளாங்கண்ணி குளத்தின் அருகே மரியன்னை குழந்தை இயேசுவுடன் தோன்றி, தனது மகனுக்கு பால் வழங்குமாறு கேட்டார். அன்னையின் விண்ணக அழகால் மெய்சிலிர்த்த அச்சிறுவன், குழந்தை இயேசுவுக்கு பால் கொடுத்தான். பால் குறைந்ததால் பண்ணையார் சிறுவனை திட்டித்தீர்த்தார். சிறிது நேரத்தில் அதிசயமாக சிறுவன் கொண்டு வந்த பானையிலிருந்து பால் பொங்கி வழிந்தோடியது. இந்த அதிசயத்தைக் கண்ட மக்கள் அனைவரும் சிறுவன் கண்ட விண்ணகத் தாயைக் காண மிகவும் ஆசைப்பட்டனர். அன்னை காட்சி அளித்த இடத்தில் மக்கள் கூடி செபிக்கத் தொடங்கினர். பலரும் தங்கள் துன்பங்கள் தீர உதவுமாறு அன்னை மரியாவிடம் வேண்டிக்கொண்டனர்.
இரண்டாவதாக, தனது மகனுக்காக மனதுருகி செபித்த ஒரு தாயின் வேண்டுதலுக்காக, 1637ஆம் ஆண்டு மரியன்னை மீண்டும் காட்சி அளித்தார். நடுத்திட்டு என்ற இடத்தில் மோர் விற்றுக்கொண்டிருந்த கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுவனுக்காக அன்னை மரியா தோன்றினார். 'மகனே, எழுந்து நாகப்பட்டினத்தில் உள்ள செல்வந்தரிடம் சென்று ஒரு ஆலயம் கட்ட சொல்' என்ற அன்னையின் வார்த்தைகளைக் கேட்ட சிறுவன் அதிர்ந்து போனான். 'அம்மா, என்னால் எப்படி நடக்க முடியும்?' என்றான் சிறுவன். 'உன்னால் முடியும்' என்றாள் அன்னை. அவன் எழுந்தான், நடந்தான், அங்கு ஓடத் தொடங்கியவன் செல்வந்தர் வீட்டில் போய்தான் நின்றான். அன்னையின் புகழ் சுற்றுப் புறமெங்கும் பரவ, அன்னை காட்டிய இடத்தில் ஒரு சிறிய ஆலயம் கட்டப்பட்டது.
மூன்றாவதாக, 1671ஆம் ஆண்டு, இந்தியாவுக்கு பாய்மரக் கப்பலில் பயணம் செய்த போர்ச்சுக்கீசியர்கள் சிலர் நடுக் கடலில் வீசியப் புயலில் சிக்கிக் கொண்டனர். என்ன செய்வதென்று அறியாமல் திகைத்த அவர்கள், அன்னை மரியாவிடம் உதவி கேட்டனர். 'அம்மா, நாங்கள் கரை சேரும் இடத்தில் உமக்கு ஒரு ஆலயம் கட்டுவோம்' என்று வாக்குறுதி அளித்தனர். மரியன்னையின் உதவியால் புயல் அடங்கி கடல் சீற்றம் ஓய்ந்தது. கப்பலில் பயணம் செய்த போர்ச்சுக்கீசியர்கள் வேளாங்கண்ணியில் பாதுகாப்பாக கரை இறங்கினர். அன்று செப்டம்பர் 8ஆம் தேதி, தேவமாதாவின் பிறந்த நாள். தங்களை பத்திரமாகக் கரை சேர்த்த அன்னைக்கு நன்றியாக, வேளாங்கண்ணியில் இருந்த சிறிய ஆலயத்தை பெரிதாக கட்டி எழுப்பினர். கலை வண்ணமிக்க பீங்கான் ஓடுகளால் ஆலயப் பீடத்தை அலங்கரித்தனர். தங்கள் கப்பலின் பாய்மரத் தூணை ஆலயக் கொடிமரமாக நட்டனர். அதில்தான் இன்றளவும் அன்னையின் கொடி பறந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் மாதாவின் பிறந்த நாளன்று வேளாங்கண்ணி மாதா ஆலயத் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்வாலயத்தின் மேற்கில் உள்ள விரிவாக்க முகப்பு, பிரான்சு நாட்டில் உள்ள லூர்து நகரில் உள்ள பேராலய வடிவில் கட்டப்பட்டுள்ளது. தொடக்கத்தில் நாகப்பட்டினம் கிறிஸ்தவப் பங்கின் துணை ஆலயமாக வேளாங்கண்ணி இருந்து வந்தது. 1771ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அருட்தந்தை ஆன்டனியோ டி ரொசாரியோ அடிகளார் கண்காணிப்பில் தனிப் பங்காக உருவானது. வேளாங்கண்ணி முதன்மைப் பேராலயம் 1920 மற்றும் 1933 ஆகிய ஆண்டுகளில் புதுப்பிக்கப்பட்டது. ஏராளமான அற்புதங்கள் நடந்ததால் சமயம், இனம், மொழி கடந்து ஆயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் திருத்தலமாக மாறியது. இந்த ஆலயத்தின் அற்புதங்களுக்கும், புகழுக்கும் அங்கீகாரம் அளிக்கும் வகையில், திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான், வேளாங்கண்ணி திருத்தலக் கோயிலை 1962 நவம்பர் 3ஆம் நாள் "இணைப் பெருங்கோவில்" (minor basilica) என்னும் நிலைக்கு உயர்த்தினார். 2012ஆம் ஆண்டு வேளாங்கண்ணி ஆலயம் "பெருங்கோயில்" நிலைக்கு உயர்த்தப்பட்டதன் 50ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாடப்பட்டது.
வேளாங்கண்ணி அன்னையைத் தேடி வரும் அனைவரும், அந்த அன்புத் தாயின் ஆசியினால் வாழ்வில் பல அற்புதங்களைப் பெற்று மகிழ்கிறார்கள்.
இதையும் படிங்க:வேளாங்கண்ணி பேராலயத்தில் நாளைமுதல் வெளிமாநில, மாவட்ட பக்தர்களுக்கு அனுமதி!