நாகை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் நவகிரக ஸ்தலமான செவ்வா, தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி, செல்வம் முத்துக்குமாரசுவாமி ஆகிய தனி சன்னதிகளில் சுவாமிகள் எழுந்தருளி அருள்பாலித்துவருகின்றனர். இந்தக் கோயிலில் சுவாமியை வழிபட்டால் நான்காயிரத்து 440 நோய்கள் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம்.
அதன் அடிப்படையில் வைத்தீஸ்வரன் கோயிலில் பக்தர்கள் சித்தாமிர்த தீர்த்தக் குளத்தில் நீராடி சுவாமி அம்பாளை வழிபட்டு நேர்த்திக்கடனை பூர்த்திசெய்து செல்கின்றனர்.
புகழ்பெற்ற இந்தக் கோயிலில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு செய்ய அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலையில் அடிக்கல் நாட்டப்பட்டது.
இதனையொட்டி, கோயிலில் சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. அப்போது 21 செங்கற்கள் எடுத்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செய்யப்படும் திருப்பணிக்காக 46 பணிகள் தேர்வு செய்யப்பட்டு அதில் 25-க்கு அனுமதி பெறப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகளுக்கு அனுமதி விரைவில் பெறப்பட்டு வேலைகள் தொடங்கப்படும். இந்தப் பணிகள் அனைத்தும் இரண்டரை ஆண்டுகளுக்குள் முடிப்பதற்காக தீர்மானிக்கப்பட்டுள்ளது.