மயிலாடுதுறை மாவட்டத்தில் நிமோனியா, மூளைக்காய்ச்சல் நோயினைத் தடுக்கும் நியூமோகோக்கல் கான்ஜுகேட் தடுப்பூசி போடும் முகாமை, மயிலாடுதுறை நகர அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா இன்று தொடங்கிவைத்தார்.
ஒரு வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கு மூன்று தவணைகளாகத் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
- பிறந்த குழந்தைகளுக்கு முதல் தவணையாக 45 நாள்களிலும்,
- இரண்டாம் தவணையாக 105 நாள்களிலும்,
- மூன்றாம் தவணை தடுப்பூசி ஒன்பதாவது மாதத்திலும் போடப்படுகிறது.
பிறந்து 45 நாள்கள் ஆன குழந்தைகளுக்கான தடுப்பூசி இன்று போடப்பட்டது. ஏராளமான பெற்றோர் ஆர்வமுடன் தங்களின் குழந்தைகளுக்குத் தடுப்பூசியை வரிசையில் நின்று காத்திருந்து போட்டுச்சென்றனர்.
929 குழந்தைகளுக்குத் தடுப்பூசி
இது குறித்து மருத்துவத் துறை அலுவலர்கள் கூறுகையில், "மாவட்டத்திலுள்ள ஒரு வயதிற்குள்பட்ட 11 ஆயிரத்து 151 குழந்தைகளுக்கு நிமோனியா தடுப்பூசி போடப்பட உள்ளது. அடுத்த ஒரு மாதத்தில் 929 குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்படும். இந்தத் தடுப்பூசி மாவட்டத்திலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் இலவசமாகப் போடப்படும்" என்று தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா முருகன், மாவட்ட மருத்துவத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: '12ஆம் வகுப்பு துணைத்தேர்வு தேர்வு - விண்ணப்பப் பதிவு தொடக்கம்'