மயிலாடுதுறை: திருவாரூர் சாலை கேணிக்கரையை சேர்ந்த 21 வயது பெண்ணும், தரங்கம்பாடி தாலுகா ஆறுபாதியை சேர்ந்த குபேந்திரனும் (23) காதலித்து வந்துள்ளனர்.
கடந்த 20ஆம் தேதி இரவு 7 மணி அளவில் இவர்கள் இருவரும், மயிலாடுதுறையிலிருந்து முளப்பாக்கம் கிராமத்தை நோக்கி சென்றுள்ளனர். இந்நிலையில் முளப்பாக்கம் பழைய தரங்கம்பாடி ரயில்வே சாலை அருகே சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் 2 பேர், காதலர்கள் இருவரையும் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
பின்னர் குபேந்திரனை ஒருவர் பிடித்துக் கொள்ள, மற்றொருவர் பெண்னை மானபங்கம் படுத்த முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் கூச்சலிட அடையாளம் தெருயாத நபர்கள் இருவரும், அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் (ஜூலை 21) அதே அடையாளம் தெரியாத நபர்கள் இருவரும் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று, அவரது செல்போன் எண்ணை கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதனால் அச்சமடைந்த அப்பெண், இது குறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அதில் பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டவர்கள் மயிலாடுதுறை அருகே முளப்பாக்கம் மெயின் ரோட்டை சேர்ந்த அஜித்குமார் (24), செருதியூர் கீழத்தெருவை சேர்ந்த பாலசுப்ரமணியன் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இதனையடுத்து அஜித்குமார், பாலசுப்ரமணியன் ஆகிய இரண்டு பேரையும் காவல் துறையினர் கைது செய்து, பெண்ணிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட முயன்றதாக வழக்குப் பதிவு செய்தனர். இதனைத்தொடர்ந்து அஜித்குமார், பாலசுப்பிரமணியன் ஆகிய இரண்டு பேரையும் மயிலாடுதுறை நீதிமன்றம் முன் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: மருத்துவமனையில் உயிரிழந்த பெண்: தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்