மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் காவேரி நகரை அடுத்த ஆரோக்கியநாதபுரம் பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா தலைமையின் கீழ் ஏடிஎஸ்பி., டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் போலீசார் என 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். மேலும், இது மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களின் தலைமை அலுவலகமாவும், பொதுமக்களின் குறை தீர்த்து வைக்கும் இடமாகவும் திகழ்கிறது.
இந்த நிலையில், கடந்த வாரம் நள்ளிரவு நேரத்தில் மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள ஒரு ஏசி அறையில் ஆண் மற்றும் பெண் காவலர்கள் இரண்டு பேர் தனிமையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த தகவலறிந்து விரைந்து வந்த துணை காவல் கண்காணிப்பாளர், அந்த ஏசி அறையில் கதவு உள்பக்கமாக பூட்டி இருப்பதைப் பார்த்து கதவைத் தட்டி உள்ளார்.
சில நிமிடங்கள் வரை கதவை யாரும் திறக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த அதிகாரி, பூட்டிய அறை உள்ளே இருப்பது யார், நீங்களாக வெளியில் வருவீர்களா அல்லது கதவை உடைத்து நான் உள்ளே வரட்டுமா? எனக் கேட்டுள்ளார். அப்போது யாரோ வந்துவிட்டார்கள் என பயந்து போன அந்த காவல் ஜோடி, மெதுவாக கதவைத் திறந்து வெளியில் வந்துள்ளனர்.
பின்னர் அவர்கள் இருவரையும் பார்த்த காவல்துறை கண்காணிப்பாளர், அழைத்துச் சென்று விசாரணை செய்துள்ளார். அந்த விசாரணையில், ஆண் காவலர் அதே கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியில் வருபவர் என்றும், அந்த பெண் காவலர் குத்தாலம் காவல் நிலையத்தில் பணியில் உள்ளவர் என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் இருவரும் திருமணம் ஆகாதவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு ஏடிஎஸ்பி வேணுகோபால் அறிக்கை அளித்துள்ளார். அந்த அறிக்கையின்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உடனடியாக தீவிர விசாரணை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, பணியின்போது ஒழுங்கீனமாகவும், தவறாகவும் நடந்து கொண்டதாக இரு காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா உத்தரவிட்டுள்ளார்.