தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் நேற்று நாகப்பட்டினத்தைச் சேர்ந்த ஹசன் அலி, ஹாரிஸ் முகமது, சென்னையைச் சேர்ந்த முகமது புகாரி ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
பல மணி நேரம் நடத்திய சோதனைக்குப் பின்னர் மூவரது வீடுகள், அலுவலகத்திலிருந்த ஒன்பது செல்லிடப்பேசிகள், 15 சிம் கார்டுகள், ஏழு மெமரி கார்டுகள், மூன்று மடிக்கணினிகள், ஆறு வன்தட்டுகள் (ஹார்டு டிஸ்க்), 7 பென்டிரைவ்கள், துண்டுப் பிரசுரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகப் பணம் பெற்று இந்தியாவில் ’அன்சாருல்லா’ என்ற இயக்கத்தை உருவாக்கியுள்ளனர். அந்த அமைப்பு இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டதாகவும் இந்தியா மீது தாக்குதல் தொடுக்கச் சதித்திட்டம் தீட்டியதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சோதனையின்போது தலைமறைவாகியிருந்த ஹாரிஸ் முகமது, ஹசன் அலி ஆகியோரை நேற்று மாலை தேசிய புலனாய்வுக் குழு கைது செய்தது. நாகை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் இருவரிடம் நள்ளிரவிலும் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர், அவர்களை இன்று காலை நாகை நகரக் காவல் நிலையத்திலிருந்து தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினரின் பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.