மயிலாடுதுறை: தரங்கம்பாடி தாலுகா கருவாழக்கரை மேலையூர் மேல தெருவில் ஆனந்தராஜ் - ரம்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். கூலி வேலை செய்யும் ஆனந்தராஜ் 2015ஆம் ஆண்டு கீழையூரை சேர்ந்த ரம்யாவை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 7 வயதில் மௌனிஷ், 5 வயதில் ஆகாஷ் என இரு மகன்கள் உள்ளனர். இரண்டு குழந்தைகளுக்கும் பிறந்த 3 மாதத்தில் கண் பார்வை இல்லாதது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த தம்பதி, இரு குழந்தைகளுக்கும் சிகிச்சையளிக்க மயிலாடுதுறை, பாண்டிச்சேரி, மதுரை அரவிந்தா கண் மருத்துவமனை என பல்வேறு இடங்களுக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அங்கு குழந்தைகளுக்கு கண்ணிற்கு செல்லும் நரம்புகள் நன்றாக உள்ளதாகவும், மூளைக்கு செல்லும் நரம்பில் பிரச்சனை உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் ஆனந்தராஜ் - ரம்யா தம்பதி தங்கள் பிள்ளைகளுக்கு கண் பார்வை கிடைக்க தொடர் சிகிச்சையளிக்க போதிய வருமானம் இல்லாமல் தவித்து வருகின்றனர். கூலி வேலைக்கு இருவரும் சென்ற நிலையில் கண் பார்வையில்லாத குழந்தைகளை பார்த்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதால் ரம்யா வேலைக்கு செல்வதையே நிறுத்தியுள்ளார்.
குடும்ப சூழ்நிலை காரணமாக குழந்தைகளை ஆனந்தராஜின் பெற்றொர்கள் காளிமுத்து, மலர் ஆகியோரின் பராமரிப்பில் விட்டுவிட்டு அவ்வப்போது ரம்யா வேலைக்கு சென்று வருகிறார். முதல் மகன் மௌனிஷ் மேலையூரில் உள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்ட நிலையிலும் பெற்றொர் பார்வை குறைபாட்டால் பள்ளிக்கு முழுமையாக அனுப்புவதில்லை.
மௌனிஷ் தான் படித்து இன்ஜினியராக போவதாகவும், ஆகாஷ் போலீஸ் வேலைக்கு செல்ல போகிறேன் என்று கனவுகளை சுமந்து இரண்டு சிறுவர்களும் ஒருவருக்கு ஒருவர் துணையாக சேர்ந்து வீட்டில் விளையாடி வருகின்றனர். இருவரும் சினிமா பாடல்களை பாடி அசத்துகின்றனர். 600 ரூபாய் சம்பளத்தில் கூலி வேலை செய்து வரும் ஆனந்தராஜ் கையில் பணம் இல்லாததால் பிள்ளைகளுக்கு கண் பரிசோதனை செய்வதற்கு கூட மதுரைக்கு அழைத்து செல்ல முடியவில்லை.
அனைத்து பிள்ளைகளைப் போல் தங்கள் இரண்டு பிள்ளைகளும் ஓடியாடி விளையாட வேண்டும் என்றும், மற்ற மாணவர்களை போல் தங்கள் மகன்களும் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்றும் கனவு காணும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கண் பார்வை கிடைக்க அரசு உதவி செய்ய வேண்டும் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மாலை நேர பாடசாலையில் பயிலும் மாணவர்களுக்கு முடி திருத்திய விஜய் மக்கள் இயக்கம்!