கரோனா நோயால் எங்களை ஒன்றும் செய்துவிட முடியாது என வீராப்போடு வீதிகளில் உலாவரும் இளசுகளுக்கு பலமுறை அறிவுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் காவல் துறையினர் தங்களது பணியை தொய்வின்றி செய்துதான் வருகின்றனர். இருந்தாலும் அவர்கள் கேட்க வேண்டுமே!
காவலர்கள் தொண்டை தண்ணீர் வற்ற சொல்லும் அறிவுரைகளை காதில் போட்டுக்கொள்ளாத இளைஞர்கள் ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் சாலைகளில் சுற்றித் திரிவதும், கூட்டம் கூட்டமாக ஒன்று சேர்ந்து விளையாடி அலட்சியப்போக்கோடு இருந்துவருவது கரோனாவுக்கு சிவப்பு கம்பளமிடுவதற்கு ஒப்பாகும்.
இருந்தாலும் காவல் துறை தனது கடமையிலிருந்து பின்வாங்குமா? 'அடிக்கும் கைதான் அணைக்கும்' என்பது சொலவடை! ஆனால் காவல் துறை, இளசுகளின் சேட்டைகளை கட்டுமீறுவதைத் தடுக்க 'அணைக்கும் கைதான் அடிக்கும்' என்ற பதத்தைத் தற்போது கையிலெடுத்துள்ளது.
அதன்படி, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் ஊர் சுற்றும் இளைஞர்களை வளைத்துப் பிடிக்க காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நாகை மாவட்டம் பாப்பாகோவிலைச் சேர்ந்த 12 இளைஞர்கள் அவ்வூரின் திடலில் கையுந்து பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். அரசின் உத்தரவை அலட்சியப்படுத்திய அந்த இளைஞர்களைச் சுற்றிவளைத்த காவலர்கள், 12 பேரையும் நகர காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் இளைஞர்கள் 12 பேரும் ஆய்வாளர் அனந்தகுமார் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். அந்த உறுதிமொழியில், "ஊரடங்கு உத்தரவை மீறியதற்கும், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் வீதியில் விளையாடுவதற்கும் தங்கள் மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்துள்ளதைத் தாங்கள் அறிவோம்.
மீண்டும் இந்தத் தவறு நடந்தால் தங்களுக்கு அரசு வேலைவாய்ப்பு, வெளிநாடு செல்வதற்கான கடவுச்சீட்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவை இனி கிடைக்காது'' என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து கையுந்து பந்து விளையாடிய 12 இளைஞர்களின் பெற்றோர்களுக்கு அறிவுரை கூறிய ஆய்வாளர், இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என இளைஞர்களை எச்சரித்து அனுப்பினார்.
இதையும் படிங்க: ஊரடங்கிலும் அடங்காத கடத்தல்... உணவு டெலிவரி வண்டியில் இரண்டு தலை பாம்பு!