மயிலாடுதுறை: சீர்காழியில் அமமுக சார்பில் அறிஞர் அண்ணாவின் 115ஆவது பிறந்நாள் விழா பொதுக்கூட்டம் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் தலைமையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அப்போது விழா மேடையில் அவர் பேசுகையில், "ஆட்சி பொருப்பில் ஏற்றிவிட்டவர்களையே எந்த ஊர் என கேள்வி கேட்டவர்கள், நமக்கு துரோகம் செய்த புல்லுருவிகளை மக்கள் தூக்கி எறிந்து வருகிறார்கள். மக்களுக்காக கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு என ஒவ்வொரு வீட்டிலும் கல்விக் கண்ணை திறந்து வைத்தவர் தான் அறிஞர் அண்ணா.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்கிற அண்ணாவின் வழியில் ஏழைகளுக்கான பல்வேறு திட்டங்களை வகுத்துக் கொடுத்தவர்கள் தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், அம்மா ஜெயலலிதா. அண்ணா உடல் நலக்குறைவால் நம்மை விட்டு பிரிந்தபோது புரட்சித் தலைவர் எம்ஜிஆரின் தயவால் முதலமைச்சர் ஆனவர் தான் கருணாநிதி.
ஆனால், அவர் நமது கோட்பாடுகளை கைவிட்டு, பட்டி தொட்டி எல்லாம் ஊழலை பெருக்கெடுத்து ஓட வைத்தார். முதலமைச்சரான கருணாநிதி கோபாலபுரத்தையே தனது கட்சி ஆக்கிக் கொண்டார். அடிப்படை தொண்டர்களால் தான் கட்சியின் தலைமை பொறுப்புகள் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படி உருவாக்கப்பட்ட கட்சி இன்று வியாபார நிறுவனமாக மாறிவிட்டது.
அப்படி தொண்டர்களுக்கான கட்சியில் புரட்சித்தலைவி அம்மா (ஜெயலலிதா) இருந்த பதவியில், தற்போது பழனிசாமி இருந்து கொண்டு கட்சி கபளீகரம் செய்து விட்டார். பழனிசாமி கட்சியின் தலைவராக இருக்கும் வரை அதிமுக எந்த காலத்திலும் ஆட்சிக்கு வர முடியாது.
அன்று ஆர்கே நகர் தொகுதியில் பழனிசாமி எதிர்த்து குக்கர் சின்னத்தில் நின்று அமமுக மாபெரும் வெற்றி பெற்றது. ஆனால் இரட்டை இலை சின்னத்தை வைத்துக்கொண்டு, கூட்டணி கட்சிகளை வைத்துக்கொண்டு, பண பலத்தை வைத்துக் கொண்டும் அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை.
2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் என்னை பார்த்து பழனிசாமி பயப்படுகிறார் என்பதால், நான் தேர்தலில் கூட போட்டியிடவில்லை, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தீய சக்தி திமுகவையும், துரோக சக்திகளையும் மக்கள் தோற்கடிப்பார்கள். உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு கூட நமக்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடகா தர மறுக்கிறது, வரும் காலங்களில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நிலை ஏற்படும்.
நம்மை வறுமையில் தள்ளுவதற்கு கர்நாடக அரசு முயல்கிறது, அதற்கு திமுக அரசு துணை போகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விவசாயிகளைப் பற்றியோ, ஏழை எளிய மக்களை பற்றியோ கவலை இல்லை, நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியை பற்றி மட்டுமே அவர் சிந்தித்து வருகிறார். அதனால் தான் இதுவரை தண்ணீர் பெறுவதற்கான எந்த முயற்சியையும் அவர் மேற்கொள்ளவில்லை" என குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் இரண்டு கோடிக்கும் மேல் குடும்பங்கள் இருக்கும்போது, தேர்தல் வருகிறது என்ற அவசரத்தில் ஒரு கோடி குடும்பத்திற்கு மட்டும் அவசர கதியில் பணத்தை வழங்கியுள்ளார். அனைத்து குடும்பங்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என தெரிவித்துவிட்டு, பெயர் அளவில் திட்டத்தை கொண்டு வந்துள்ளனர்" என விமர்சித்து பேசினார்.
மேலும், சனாதனம் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், “திமுக அரசு, தமிழ்நாட்டிலும் நடக்கும் சட்ட ஒழுங்கு பிரச்னைகள், பெருகிவரும் போதைக் கலாச்சாரம் ஆகியவற்றில் இருந்து மக்களை திசை திருப்பும் முயற்சியாக சனாதானத்தை குறித்து பேசி வருகிறது” என விமர்சித்தார்.
இதையும் படிங்க: தேனியில் பயன்பாட்டுக்கு வந்த 19வது சரக்கு முனையம்!