நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மயிலாடுதுறை -தரங்கம்பாடி இடையே 1924 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ரயில் சேவை கடந்த 1985ஆம் ஆண்டு தகுந்த காரணங்கள் எதுவுமின்றி திடீரென நிறுத்தப்பட்டது.
அதன்பின் அத்தடத்தில் ரயில் தண்டவாளங்கள் அகற்றப்பட்ட போதிலும், அந்த ரயில்வே பாதை இன்றளவும் அகற்றப்படாமல் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.
கடந்த 1999ஆம் ஆண்டு இந்த தடத்தில் ரயில்வே சேவை வேண்டும் என அப்போதைய குத்தாலம் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் குத்தாலம் பி.கல்யாணம், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து உரிய பதில் இல்லாததால் சென்னை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் வழக்கு தொடுத்தார். அவ்வழக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.
இது குறித்து குத்தாலம் பி.கல்யாணம் கூறுகையில், "மயிலாடுதுறை - தரங்கம்பாடி இடையே நிறுத்தப்பட்ட ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்து இருந்தேன். ஆனால், 25 ஆண்டுகள் கடந்தும் உரிய பதில் வரவில்லை.
நான் முதன்முறை கோரிக்கை வைக்கும் போது காரைக்கால் - நாகப்பட்டினம் இடையே ரயில்வே சேவை இல்லாமல் இருந்தது. இந்த 20 ஆண்டுகளில் அச்சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் நீதிபதிகள் எனது கோரிக்கை மனுவை பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இது 20 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி நிச்சயமாக மயிலாடுதுறை - தரங்கம்பாடி - காரைக்கால் ரயில் சேவை விரைவில் தொடங்கும்" என்றார்.
இதையும் படிங்க: 'பள்ளி விடுமுறை தொடர்பாக முதலமைச்சர் அறிவிப்பார்' - அமைச்சர் செங்கோட்டையன்