மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பட்டவர்த்தி கிராமத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தில், அவரது உருவப்படத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவிக்க முயன்றபோது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு அம்பேத்கரின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் பட்டவர்த்தி கிராமத்தில் அசம்பாவிதங்களைத் தவிர்க்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஆண்டு பட்டவர்த்தி கிராமத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை பிரச்சனைகளின்றி நடத்துவது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பட்டவர்த்தி கிராமத்தில் அரசு தரப்பில் அம்பேத்கர் உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்துவது என்றும், இதில் கிராம மக்கள் இரு தரப்பினரும் தலா 20 பேர் கலந்து கொண்டு மரியாதை செலுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, இன்று(ஏப்.14) காலை பட்டவர்த்தி கிராமத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலக வாசலில், அரசு தரப்பில் அண்ணல் அம்பேத்கரின் உருவப்படம் வைக்கப்பட்டு, அதற்கு வருவாய் கோட்டாட்சியர் வ.யுரேகா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதைத் தொடர்ந்து அரசு தரப்பில் வட்டாட்சியர், காவல் துறையினர் மரியாதை செலுத்தினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் மட்டும் 20 பேர் கலந்து கொண்டு, அம்பேத்கரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மற்றொரு தரப்பினர் மரியாதை செலுத்த வரவில்லை. கிராமத்தில் மோதல் ஏற்படாமல் தடுக்க தஞ்சாவூர் டிஐஜி ஜெயச்சந்திரன் தலைமையில் 560 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பட்டவர்த்தியில் அம்பேத்கர் நினைவு தினத்தை அனுசரிக்க அனுமதி மறுப்பு: விசிக கண்டனம்